Saturday, February 28, 2015



தேக்கு மரவீடு



தேக்கு மரவீடு

நெடிதுயர்ந்த மரங்கள் ஏனிப்படி இலையுதிர்த்தன!
மழை வேண்டி சிராடி விட்டனவா?
மாணிக்கப் பரல்களாய் சிதறிய நக்ஷத்திரங்கள்
மெல்லக்கவியும் கங்குலூடே ஊரும் ஊர்தி
பாதையிலிருந்த சாமக்குருவி திடுக் கிட்டதை,
வழியமர்ந்த தோட்டக்கள்ளன் மலங்கப்பார்த்ததை
பார்த்துப் பரவசம்; முதலறிமுகமிதுவல்லவோ
சீட்டா வீடு முன் காட்டெருமைக்கூட்டம்
குறுக்கே நகரும் காட்டுப்பன்றி பார்த்தும் பாரா ஆல்
புல்வெளியை இருளரக்கன் இறுக்கும் முன்
பசியாற்ற விளையும் புள்ளி மான்கள் கூட்டமே!
யானை படுத்தது போல மலை படுத்திருப்பதால்
ஆனை மலை யெனப் பெயர் சூட்டப்பட்டதா?
தேக்கு மரத்தாலேயே உருவான மரவீட்டில்
கதிரவன் எழட்டுமெனக் காத்திருந்தேன்
கானகத்துள் காலை நடை புகத்தாமதிருந்தேன்
பார்வை ஊடுருவும் கண்ணாடிச் சாளரங்கள்
முகப்பூச்சென பனி பூசிக் கொண்ட இக்குடிலில்
எஞ்சிய நாட்கள் சுவாசித்திருக்க ஆசை.

சாமக்குருவி – Little Night Jar
தோட்டக்கள்ளன்- Indian Pitta

Top Slip
Wood House---- Year of construction---1978
                          Latitude—10  28.15  north
                        Longitude—76    50.65 east
                        Altitude--- 740 metres above  MSL

                        Morning--- 22.01.2003 –wednesday- 07.10 hrs

Sunday, February 15, 2015


பாலைவனக்கப்பல்
            

                 ஒட்டகப்பண்ணை பிரத்யேகமாக பிகானிரில் உளது. இந்தப்பண்ணை பிகானிரிலிருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ளதால், எங்கள் கைடு மனோஜ் ஆட்டோவில் அழைத்துச்சென்றார். உள்ளே நுழைந்ததும், ஒட்டக வாடை ஒட்டிக்கொள்கிறது. அங்குள்ள ஒட்டக கண்காட்சிக்கு அழைத்துச்சென்றார். மூன்று விதமான ஒட்டகங்கள் பல நூற்றாண்டாக அறியப்படுகிறது. பிகானிரி, ஜோத்புரி, மற்றும் ஜெய்சால்மிரி. கண்காட்சியில் ஒட்டகத்தின் உணவான கோதுமைத்தாவரம், மேலும் எலும்பு, மயிர், தோல், பல், என ஒட்டக பாகங்களால் ஆன பல வகையான பொருட்கள் வைத்திருந்தனர். ஒட்டகம் பாலைவனத்தைக்கடக்க மட்டுமே என்று நினைத்த எனக்கு மலைப்பாக இருந்தது.
            ஒட்டகங்கள் இங்கு இனப்பெருக்கம் செய்விக்கப்படுகின்றன. 50000 என விலைபோகும் ஒட்டகங்கள் பாலைவனத்தில் பயணம் செய்ய ஏதுவான கால் குளம்புகள், பாலைவன மணல் காற்றில் உதறி வந்தால், கண்களை மூடிக்கொள்ள பெரிய இமைகள், மேலும் மூக்கைக்கூடமூடிக்கொள்ளமுடியும். பாலைவன முட்குட்டை மரங்களில் முள் குத்தாமல் உண்ண பிளவு பட்ட நீண்ட உதடுகள், ஒரு வாரமானாலும் நீர் குடிக்காமல், தாக்குப்பிடிக்க சேமிக்க உடலில் வசதி என இறைவன் அளித்துள்ளார். காலையில் மேய்ச்சலுக்கு அனுப்பப்படுகின்றன. மதியத்துக்கு மேல் ஓய்வாக இருந்ததைப்பார்க்கமுடிந்தது.
காகமிரண்டு ஒட்டகங்களைச்சொரிந்து, உண்ணி அல்லது புண்களைக்கிளறிக்கொண்டிருந்தன. காகங்கள் எல்லா மிருகங்களோடும் ஒட்டி உறவாடும் என உணற முடிகிறது. ஒட்டகப்பால் குடித்தேன் எனப்பெருமையாகச்சொல்லிக்கொள்ளலாம். முதலில் ஒட்டகப்பால் எந்த ஃப்ளேபவரும் இல்லாமல் குடித்து என்ன சுவை என அறியலாமென வெறும் பாலை நானும் நண்பர் வஜ்ரவேலும் அருந்தினோம். பால் அடர்த்தி, சுவை என்னவோ எனக்கு நீர் கலக்காத மாட்டுப்பால் சுவை போலிருந்தது. பிறகு பைனாபில் சுவை கொண்டதை வாங்கினோம்.

ஒட்டகக்குட்டிகளின் ஒலி கேட்க முடிந்தது. சாதுவான பிராணிகள் மேலும் அப்பாவிகளாகத்தெரிந்தன. ஒட்டக சவாரி ஜெய்சால்மிரில் வைத்துக்கொள்ளலாம் என நினைத்துக்கொண்டேன். இங்கு ஒட்டக பாகங்களால் செய்த பை, தோல் மேல் வரைந்த ஓவியங்கள், பல், முடி என கோர்த்த கழுத்தில் இடும் ஆபரணங்கள் என விற்பனை நிலையம் இருக்கிறது. மணல் வெளியில் இட்ட தார் ரோடு வழியாக ஆட்டோவில் திரும்பச் செல்ல ருசித்தது. மாறுபட்ட வாழ்க்கை என்றும் ருசிக்கத்தான் செய்யும்.