Saturday, September 13, 2014




குயில் அக்கா
(Common Hawk-Cuckoo or Brainfever Bird)
இது என்னடா! குயிலுக்கு அக்காவா! அப்போது தங்கை யார் ? எனக்கேட்டு விடாதீர். இது குயில் போல இனிமையாகக் கூவக்கூடியது தான். ஆனால் காய்ச்சலில் அனத்துவது போல விடாமல் குரல் கொடுக்கும். தொண்டை வலிக்குமே! எனக்கூட நான் நினைப்பேன். வாய் ஓயாமல் அதிகாலை ஐந்து மணிக்கு கத்த ஆரம்பித்தால் முக்கால் மணி நேரத்துக்கு கூவும். நான் பல முறை பிரம்ம மூர்த்தத்தில் எழும் போது கேட்டு சந்தோஷப்பட்டிருக்கிறேன். இப் பறவை பூங்காக்கள், அடவிய தாவரங்கள் வளர்ந்திருக்கும் இடங்களில் காணலாம். என் இல்லத்துக்கு மேற்குப்புறமாக அடவிய தாவரங்கள் வளர்ந்திருக்கும் இடம் உள்ளது. டார்ச் எடுத்துக்கொண்டு இன்னும் புலராத கங்குலில் மேற்குப்புறமாக ஒலி வரும் திசையில் செல்லலாமா என நினைப்பேன்.
விடிந்தும் விடியாத பொழுது இது குரல் கொடுக்கிறது. தனிமையாக மரக்கூட்டத்தினூடே இருக்கும் என்பது உண்மை தான். எனது நகரத்தின் மேற்குப்புறம் சந்தடியற்ற, தாவரம் அடவிய பகுதி உள்ளது. ஒரு நாள் சோளம் மாட்டுத்தீவனத்துக்காக பயிரிடப்பட்ட விளைநில மேற்குப்புறத்தில் மாமரக்கூட்டமிருக்க, அதிலிருந்து குயில் அக்கா குரல் கேட்டது. அப்போது காலை மணி 07.30 இருக்கும். உள்ளே சோளக்காட்டுக்குள் போய் பார்த்தேன். கண்ணில் படவில்லை. இதை ஒரு சில போது தான் பார்த்திருக்கிறேன். இது கூடு கட்டாது அடுத்தவனை நம்பி இருக்கும் பறவை.சாம்பல் நிறத்தில் சிக்கரா போன்றது. நிலா காயும் போது இது ‘எனது காதலி எங்கே?’ என இந்தியில்(pee-kahan?) கேட்கிறதாம். ‘மழை வருகிறது’ என மராத்தியிலும்(paos-ala)சொல்கிறதாம். இரு வாக்கியங்களும் அருமை. எதையாவது நினைத்துக்கொண்டு கேட்டால் அதுவாகத்தான் நமக்குத்தோன்றும்.
ஆங்கிலேயன் மூளைக்காய்ச்சல்(Brain fever) என்பது போல ஒலிக்கிறது என்கிறான். மூளைக்காய்ச்சல் வந்தவன் போல பிதற்றுகிறதா! சிக்கரா ஹாக் போல பறக்கவும் வல்லது. கம்பளிப்பூச்சி, மற்ற பூச்சி, பெர்ரி, காட்டுப்பழங்கள் உண்ண ஹாக் போல ஏன் பறக்கவேண்டும்?
சலிம் அலி இப்பறவையின் கூவலை எப்படி வர்ணிக்கிறார் படியுங்கள்; A loud, screaming brain-fever, brain-fever, repeated with monotonous persistency 5 or 6 times, rising in crescendo and ending abruptly. இதன் கூவல் ‘நோட்ஸ்’ வைத்து ஒரு பாடல் எழுதி ‘ட்யுன்’ போடலாம் என இருக்கிறேன்.
எது எப்படியோ! இப்பறவையின் விடிந்தும் விடியாத கூவல் இனிமை. குயிலக்கா…குயிலக்கா… என எனக்குப்பாடத்தோன்றுகிறது. இதை அடிக்கடி குயில் போல பார்க்கமுடியவில்லையே என எனக்குள் ஏக்கமிருப்பது உண்மை தான்.



No comments:

Post a Comment