Tuesday, April 15, 2014


மாறுபட்ட நிழற்படங்கள்
Coot and chicks

            அரக்கோணம் பட்டிமேடு ஏரி கிழ மேற்காக அமைந்தது. இங்கு சில மாதங்களுக்கு முன்பு இந்த ஏரிக்குத் தெற்குப்புறமாகச்செல்லும் மோசூர் தார் சாலையில் நடந்தேன். காலை, மாலை என் மகள் வீட்டிலிருந்து ஒரு நடை இந்த ஏரிக்குப்போவேன். அது 2 கி.மீ-க்கு மேல் இருக்கும். மேற்குப்புறமாக சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருப்பர். அந்த புல்வெளி முழுவதும் மக்கள் விசிறி விட்ட காரி பேக்ஸ் ஏரி நீர் உள்வாங்கிவிட்ட நிலையில் வெள்ளை,வெள்ளையாகக் கிடக்கும். அந்த சுகாதாரக்கேட்டிலும், சிறுவர் விளையாடிக்கொண்டிருப்பர்.
          அப்படி ஒரு நாள், நடு ஏரியில் நாமக்கோழி நீர்ப்பரப்பின் மீது கூடு வைத்திருந்ததைக்கண்டேன். என் காமெராவுக்கு எட்டாத தூரம். சரியாக வரவில்லை. பறவை அடை காத்துக் கொண்டிருந்தது. இப்படிப்பட்ட பறவை வாழிடமான ஏரியை ஒரு பெரிய குப்பைத்தொட்டியாகக் கருதியிருப்பது வேதனை.டயர், நீர் குடுவை, பாலிதின் பை போத்தல் என எதுவானாலும்உபயோகி பின்னர் தூக்கி எறிஎன்ற கலாச்சாரத்தில் நீர் நிலைகளை சீரழிப்பது, அதை நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனையிலும் வேதனை. மக்களுக்கு குழாயில் நீர் வினியோகிக்கப்போய் அவர்கள் வீட்டுக்குள் 5 குழாய்கள் அமைத்து சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர்.அன்றைய காலங்களில் குடிநீருக்காக ஆறு, குளங்களை நம்பியிருந்தனர். சுத்தமாக வைத்திருந்தனர். இப்போது?
          பிறகு ஒரு மாலை நேரம் பட்டி மேடு ஏரிக்கு பைனாகுலர், காமெராவுடன்  சென்றேன். நாமக்கோழி தாயும், தந்தையும் பத்துக்குஞ்சுகளைக்கூட்டிக்கொண்டு ஏரி நீர்பரப்பில் போய்க்கொண்டிருப்பதைப்பார்த்தேன். என்ன அழகு! குஞ்சுகள் தலை சிகப்பு,நடு மண்டை சொட்டை, உடல் கருப்பு, இருந்து, நாமம் இன்னும் உருவாகவில்லை. ஏராளமான முக்குளிப்பான்கள் ஏரிப்பரப்பில் தட,தடத்தும்,குலவை விட்டுக்கொண்டும் இருந்தன. இவைகளும் இங்கு இனப்பெருக்கம் செய்கின்றன. இப்படிப்பட்ட ஏரியின் தெற்குப்புற மோசூர் சாலையில் கோழி இறகுகளை கரையோரமிட்டு தீ வைத்துக்கொலுத்துகின்றனர். பலர் மலம் கழிக்கின்றனர். நீர் நிலை, குளம், ஏரி களின் நிலை இதுவே. ஐம்பதாயிரம் ரூபாய் மோட்டர் பைக், ஐயாயிரம் ரூபாய் கைபேசி வைத்திருப்பவனும் ஏன் ஏரிமேட்டில் மலம் கழிக்கிறான். அவன் டாய்லட் கட்ட வசதி படைத்தவன் தானே!

          எப்படியாவது நாமக்கோழி தன் குஞ்சுக்கு இரை ஊட்டுவதை படம் எடுக்க அவா கொண்டு முப்பது படம் எடுத்தும் மாலை வெளிச்சம் கை விட்டது. மறு நாள் நான்கு மணி மாலையில் சென்று இருபது படங்கள் எடுக்க, நாமக்கோழி போஸ் கொடுத்து விடுமா, என்ன! உடனே குடும்ப்ப்பிள்ளைகளோடு ஏரி நடுவே நீந்தி கிழக்கே சென்றது. லென்ஸ் போதாது. இரண்டொரு படங்கள் கணனியில்  விரிக்கத் தேறின. மாறுபட்ட படங்களே பாராட்டுப்பெறும். ஜெயிக்கும். Face Book ID : Sukumar Arumugam

No comments:

Post a Comment