Wednesday, April 23, 2014

சோளக்கதிரில் ஊஞ்சலாடும் பச்சைக்கிளி
பச்சைக்கிளிகள்

கதிரவன் கிரணங்கள் தடவும் இறகுகள்

பச்சைக்கிளிகள்
            பச்சைக்கிளிகளைப்பற்றி நிறைய பாடல்கள் சங்கஇலக்கியங்களில் வருகின்றன. முக்கியமாக தினைப்புலத்தில் பச்சைக்கிளிகளை விரட்ட பரண் அமைத்து, மகளிர் கிளிகளை விரட்டுவது பற்றி செய்யுட்கள் வருகின்றன. தானியங்களை விரும்பி உண்ணும் கிளிகள் அதன் அலகு அமைப்பினால் பாதிக்கு மேல் வீணாக்குகின்றன. க்கீ….கீக்கீ… என கத்திக்கொண்டு கல்யாணத்துக்கு தாமதமானது போல துரித கதியில் பறப்பது எப்போதும் வாடிக்கை. பச்சைக்கிளி நிறம் என்றாலே தனித்து நிற்கும் நிறம். இளம் பெண்ணை பச்சைக்கிளிக்கு ஒப்பிடுவது கிளியின் அழகை சிலாகிக்கத்தான்.
            நான் நகரத்தில் வாழ்ந்தவனாதலால் தானிய விளைநிலங்களை அதிகமாகப் பார்க்க வாய்ப்பில்லாமல் போனது. அதற்கு இப்போது வாய்த்தது குறித்து நெஞ்சம் விம்மித்தணிகிறது.சூலூரின் ஊருக்குள்ளேயே ஒரு சோளக்காடு வைத்திருந்த விவசாயியை வாழ்த்தி விட்டு, புகைப்படம் எடுப்பதற்காக நாள் தவறாமல் காலை நேரம் சூர்ய கதிர்கள் வெளிச்சம் பெற்ற பிறகு செல்வேன். 1999-ல் பேராசிரியர் க. ரத்னம் எனக்கு கிடைக்கப்பெற பறவை நோக்கலில் என்னைப்புகுத்தினேன். அதிலிருந்து கிளி என்னிடம் சரியாக மாட்டவில்லை. அதாவது ஒரே ஒரு படம் சிங்காநல்லூர் குளத்தின் இரண்டாவது ஏரி மேட்டில் ரயில் தண்டவாளமருகில் கிடைத்தது. கிளி வெட்கப்பட்டு பறந்து விடும்.
            வினாயகர் கோயிலருகே கம்பி வேலிக்கருகில் இரண்டு அரளிப்பூச்செடிகள் என்னை மறைக்க, அதன் பின்புறம் நின்று கொண்டு தினமும் ஐம்பது படங்களாவது எடுத்தேன். மணி எட்டு தாண்டும் வெய்யிலில் புருவத்திலிருந்து வியர்வை கண்களில் வழிந்து கண்கள் ‘மச மச’ வென ஆகும். முதுகு சட்டை வியர்வையில் ஒட்டும். சோளக்கதிர்கள் பத்தடி உயரத்தில் நிற்க கிளிகள் வெறித்தனமாகப்பாய்ந்து வந்து விழுவதும், இறகுகள் விரித்த படி சோளக்கதிர்களைத்தேடுவதும், மையணிந்த பெண் கண்சிமிட்டுவது போல இருக்கும். அப்படி பத்து, இருபது பெண்கள் தங்கள் மையுண்டஇமைகளைத் திறந்து மூடினால் எப்படியிருக்கும், அப்படிப்பட்ட வசிகர, ரம்மியமிருந்தது.
            மயிலுக்கு அடுத்தபடி, கிளி இறகு விரிப்பு அற்புதம். க்கி…கீக்.. க்கீக்…உன்னைப்பற்றி பாடாத கவிஞர் யார்? நானும் உனக்கு ஒரு பாடல் தருவேன். கேட்பாயா? மூன்று முறை படமெடுக்கத் தவறவிட்டேன். அது சோளக்கதிரில், சின்னக்கதிராகப்பறித்துவிட்ட குதூகலத்தில் கிளி தன் அலகில் பிடித்துக்கொண்டு பறக்கும் பாருங்கள்…..அதற்கு வார்த்தைகளில்லை. சிலசமயம் மற்றொரு கிளி இதனைப்பிடுங்க துரத்தும்.
இயற்கைக்காட்சிகள் எப்போதும் பேரானந்தம். பச்சைக்கிளிகள் சோளத்தாள்களுக்கு படை எடுத்தது போல புகுந்து சோளக்கதிர்களை அலகு கொள்ளாத படி கடித்து சுவைப்பது பேரழுகு! சோளத்தட்டை கிளியின் எடை கூடத்தாங்காது சாய்வதும் மேலும் கீழுமாய்ப்போவதும் கிளிப்பச்சை சேலை உடுத்திய பெண் ஊஞ்லில் ஆடுவது போலிருந்து என்னைச்சொக்கியது.கதிர்களின் பச்சைக்கும், கிளிப்பச்சைக்கும் வித்தியாசம் தெரியாது. க்கிளிக்…..கிளிக்…'கிளி'க்காக 'கிளிக்'கிய படங்கள் இருநூறு இருக்கும். வலது கை ‘கிளிக்’கியதில் வலித்தது. ஒரு சேர சோளக் கொல்லைக்குப்பறந்து வரும், ஒரு சேர பறந்து அருகிலுள்ள வேப்ப மரத்துக்குப் பறக்கும் குழந்தைத்தனம் சுவையானது. காலைக்கதிரவன் கிரணங்கள் வருடிக்காட்டிய கிளிகளின் இறக்கை விரிப்பிலிருந்த அந்த மயக்கு பச்சை என்னை மயக்கியதை என்னென்று சொல்வேன் தோழி?

மெலிதான காடு, விளைநிலம், பழத்தோட்டம்
தேடிப்போனேன் அவளைக் காண
உயர்ந்த மரத்துளைகளில் கண்மேய
கிளிப்பச்சை சேலையடுத்தி-அதோ
தோழிகளோடு சப்தமிட்டு வந்தவளே
சிகப்பு ஆரம் கழுத்தில் காணேன்
காதலன் கழுத்திலதைக் கண்டேன்
கீக்கீஒலி உன்னிருப்பிடம் உணர்த்தியது
பறந்தாலும், அமர்ந்தாலும் கூவல்.
குஞ்சுகளைத்திருடி விற்பான் மனிதன்
எதையும் காசாக்கிடும் தந்திரம்
அழகு மாளிகையில் தங்கச்சிறை
கபட சமுதாயம் மகிழ சோதிடம்
பொம்மை பீரங்கி இயக்கி வித்தை
பசப்புக்காரன் மொழி பழகிய விந்தை
பச்சை அழகியை சிறையிடலாமா
அதற்கு சிறகேன் முளைத்தது
 வானில் பறந்து உலவத்தானே
அவை சுதந்திரக்காற்று சுவாசிக்கட்டும்
க்கீகீ..யென நெஞ்சம் வருடிப்பறக்கட்டும்.
                          சின்ன சாத்தன்- மாரிக்குருவி கவிதைத்தொகுப்பிலிருந்து...........


No comments:

Post a Comment