Saturday, September 13, 2014
குயில் அக்கா
(Common Hawk-Cuckoo or Brainfever Bird)
இது என்னடா! குயிலுக்கு அக்காவா! அப்போது தங்கை யார் ? எனக்கேட்டு விடாதீர். இது குயில் போல இனிமையாகக் கூவக்கூடியது தான். ஆனால் காய்ச்சலில் அனத்துவது போல விடாமல் குரல் கொடுக்கும். தொண்டை வலிக்குமே! எனக்கூட நான் நினைப்பேன். வாய் ஓயாமல் அதிகாலை ஐந்து மணிக்கு கத்த ஆரம்பித்தால் முக்கால் மணி நேரத்துக்கு கூவும். நான் பல முறை பிரம்ம மூர்த்தத்தில் எழும் போது கேட்டு சந்தோஷப்பட்டிருக்கிறேன். இப் பறவை பூங்காக்கள், அடவிய தாவரங்கள் வளர்ந்திருக்கும் இடங்களில் காணலாம். என் இல்லத்துக்கு மேற்குப்புறமாக அடவிய தாவரங்கள் வளர்ந்திருக்கும் இடம் உள்ளது. டார்ச் எடுத்துக்கொண்டு இன்னும் புலராத கங்குலில் மேற்குப்புறமாக ஒலி வரும் திசையில் செல்லலாமா என நினைப்பேன்.
விடிந்தும் விடியாத பொழுது இது குரல் கொடுக்கிறது. தனிமையாக மரக்கூட்டத்தினூடே இருக்கும் என்பது உண்மை தான். எனது நகரத்தின் மேற்குப்புறம் சந்தடியற்ற, தாவரம் அடவிய பகுதி உள்ளது. ஒரு நாள் சோளம் மாட்டுத்தீவனத்துக்காக பயிரிடப்பட்ட விளைநில மேற்குப்புறத்தில் மாமரக்கூட்டமிருக்க, அதிலிருந்து குயில் அக்கா குரல் கேட்டது. அப்போது காலை மணி 07.30 இருக்கும். உள்ளே சோளக்காட்டுக்குள் போய் பார்த்தேன். கண்ணில் படவில்லை. இதை ஒரு சில போது தான் பார்த்திருக்கிறேன். இது கூடு கட்டாது அடுத்தவனை நம்பி இருக்கும் பறவை.சாம்பல் நிறத்தில் சிக்கரா போன்றது. நிலா காயும் போது இது ‘எனது காதலி எங்கே?’ என இந்தியில்(pee-kahan?) கேட்கிறதாம். ‘மழை வருகிறது’ என மராத்தியிலும்(paos-ala)சொல்கிறதாம். இரு வாக்கியங்களும் அருமை. எதையாவது நினைத்துக்கொண்டு கேட்டால் அதுவாகத்தான் நமக்குத்தோன்றும்.
ஆங்கிலேயன் மூளைக்காய்ச்சல்(Brain fever) என்பது போல ஒலிக்கிறது என்கிறான். மூளைக்காய்ச்சல் வந்தவன் போல பிதற்றுகிறதா! சிக்கரா ஹாக் போல பறக்கவும் வல்லது. கம்பளிப்பூச்சி, மற்ற பூச்சி, பெர்ரி, காட்டுப்பழங்கள் உண்ண ஹாக் போல ஏன் பறக்கவேண்டும்?
சலிம் அலி இப்பறவையின் கூவலை எப்படி வர்ணிக்கிறார் படியுங்கள்; A loud, screaming brain-fever, brain-fever, repeated with monotonous persistency 5 or 6 times, rising in crescendo and ending abruptly. இதன் கூவல் ‘நோட்ஸ்’ வைத்து ஒரு பாடல் எழுதி ‘ட்யுன்’ போடலாம் என இருக்கிறேன்.
எது எப்படியோ! இப்பறவையின் விடிந்தும் விடியாத கூவல் இனிமை. குயிலக்கா…குயிலக்கா… என எனக்குப்பாடத்தோன்றுகிறது. இதை அடிக்கடி குயில் போல பார்க்கமுடியவில்லையே என எனக்குள் ஏக்கமிருப்பது உண்மை தான்.Saturday, September 6, 2014

பீரடிக்கும் இளைஞர்கள்
சமுதாயச்சீரழவு
            குடிமக்கள் என்றால் தங்களுடைய சமுதாயக்கடமைகளைச்செய்து, தானும் தன் குடும்பமும் வாழ்ந்து, பிறரையும் வாழ்வில் நல் வழிப்படுத்துவது தான் நல்ல குடிமகனுக்கு அழகு. மேலும் பிறருக்கு சேவை செய்வதில் தனது தெய்விக உள்ளத்தைப்பார்க்க வேண்டும். ஆனால் இப்போது அரசு வருமானத்துக்காக, சாராயம் விற்று சாதாரண மக்களை குடிகாரமகனாக உருவாக்குவது நியாயமற்ற செயல். இதற்குரிய தண்டனை இறைவன் நீதி மன்றத்து முன்பு மிகப் பெரிய தண்டனையாகக் கிடைக்கும். கள் குடிக்கக் கூடாது, அரசு மட்டுமே சாராயம் விற்று பணம் செய்யும் என்று ஏழை மக்களிடமிருந்து பணத்தை உருவி அவனுக்கு இலவசங்களைக்கொடுத்து கெடுப்பது அருவருப்பாக உள்ளது. உழைக்கும் வர்க்கம் இப்போது குறைவு பட்டதற்குக் காரணம் இலவசங்கள் அரசு கொடுப்பதால் தான். இது நிதர்ஷனமான உண்மை.
            எங்கள் வீட்டில் சிறு தோட்டம், மற்றும் பொது இடப் பராமரிப்புக்கு வேலையாள் கிடைப்பதில்லை. நான் அரசுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் ரிசர்வ் சைட்டை பராமரிப்பதால் எனக்கு வேலையாள் கிடைப்பதில்லை. நானே பாத்திகட்டுவது, களையெடுப்பது, நீர் ஊற்றுவது, மரம் வைப்பது,பிளாஸ்டிக் கேரிபேக்குளைப்பொருக்குவது என இருக்கிறேன். '62 வயதில் இது எனக்குத்தேவையா?' என மனம் நொந்து போகிறேன்.
 வேலையாளோடு பேசினால், அவன் போடும் சட்டங்களாவன;-
அரை நாள் தான் வேலை செய்வேன். காலை வந்தவுடன் போண்டாவோடு தேநீர், திரும்பும் போது வடையோடு தேநீர், சம்பளம் 500. இதற்கு ஒத்துக்கொண்டு அட்வானஸ் 100 கொடுத்தால் நாளை முடிந்தால் வருவேன்.’ என்கிறான்.
அரசு கட்டிலேறிய சாதாரண திராவிடஅரசியல்வாதிகள், சமுதாயத்தை எப்படி சீரழித்து விட்டனர் பாருங்கள். இப்படி ஒரு வேலையாள் சொல்வது எதனால்? 20 கி. அரிசி, சர்க்கரை, வேட்டி, சேலை, தொலை காட்சிப்பெட்டி, மிக்ஸி,ஃபேன், கிரைண்டர், சைக்கிள், பொங்கல் பரிசுகள் எனக்கொடுத்தால் அவன் வேலைக்குப்போகமாட்டான். மேலும் அன்னதானங்கள் என்ற பெயரில் அரசு,கோயில்கள், அறக்கட்டளைகள், மடாலயங்கள் இடும் சோற்றுடன் இலவசத்திருமணம், இலவசத்தாலி, கல்யாணத்துக்கு பணம், என வரிப்ணத்தை வாரி வழங்கினால் அவன் உழைப்பானா? அரசா? அல்லது அன்னமடமா? குடிகாரன் குடிப்பதற்கு இயற்கைச்சூழலைத்தேடி அமர்ந்து, குடித்துவிட்டு, பாட்டிலை உடைக்கிறான். அரசே! எந்த மாதிரி குடிமகன்களை உருவாக்குகிறீர்கள்? உங்கள் பதவி ஆசைக்காக பலியாகும் நாடே! நீ வாழ்வது எப்போது?


Friday, August 22, 2014


தாழம்பூ
          
          சூலூரில் இரட்டைக்குளங்கள் வடக்குப்புறமாக உள்ளன. ஒன்று பெரியகுளம் இரண்டு செங்குளம் () சின்னக்குளம். இந்த மாதிரி சாக்கடைநீர் கலக்காத போது, உண்மையிலேயே நறுமணம் வீசிய பகுதி. குளத்து மேட்டில் நடந்து போனால் தாழம்பூ, தாமரை, அல்லி போன்ற மலர்களைக்கண்டு ரசிப்பதோடல்லாமல், நறுமணம் நுகர்ந்து இன்புறலாம். தற்போது, சாக்கடையின் முடை நாற்றம் வீசுகிறது. சாயம், அமிலம், மனிதனின் சிறுநீர், மலம், புலங்கிய நீர் இப்படி வந்து கலந்து, நறுமணம் வீசும் மலர்கள் காணாமல் போயின. தாழம்பூவில் சிறு பூநாகங்கள் இருக்கும்.

பிரம்மன் சிவபெருமானின் முடியை பார்த்து விட்டார் எனத் தாழம்பூ பொய் சாட்சி சொன்னதால், சிவபெருமான்இனி நீ எனக்குப்பூஜைக்கு உரிய பூ நியிருக்கமுடியாதுஎன சபித்து விட்டார். தாழம்பூ புதர் பெரியது. இலை விளிம்புகள் ரம்பம்போல  இருக்கும். இலைகள் நீளநீளமாக இருக்கும். போன மாதத்தில் கண்ணுக்கு ஒரே ஒரு புதர் தாழம்பூ என்னில் கண்ணில் பட்டது. இது பெரிய குளத்தின் கிழமேற்குக் கோடியில் உள்ளது. ‘ஓலைக்கா கொண்டையிலே ஒரு கூடை தாழம்பூஎன பாடியவாறு சிறுமிகளும், பெண்களும், இளைஞர்களும் குளத்து மேட்டில் காணும் பொங்கல் நாளில் குதூகலித்துத்திரிந்து வலம் வந்தது இப்போது எங்கே? இதே கதி தான் நிறைய கிராமங்கள் மற்றும் நகரங்களில் என உணரவேண்டும்.

அதை இப்போது தொலைக்காட்சி(இடியட் பாக்ஸ்)பெட்டியின் முன்பு அமர்ந்து பார்த்து ரசிப்பது அந்நியம். நீங்களாக அனுபவப்பட வேண்டும். நிஜ வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும். நிழல் வாழ்க்கையில் நேரம் வீணடிப்பதில் எனக்கு உடன் பாடு இல்லை. குளத்தை வந்து அடையும் நீரை சுத்திகரித்து விட்டால் மீண்டும் நறுமணப்பூக்கள் மலரும். நிறைய மரங்கள் நட்டு வளர்த்து, மாதம் மும்மாரி பொழிய வைத்தால் வாசமான மலர்கள் பூக்கும். நம்மைச்சுற்றி நரகத்தையும், சுவர்க்கத்தையும் உருவாக்குவது நம் கையில் உள்ளது. சிந்தியுங்கள் தோழர், தோழியரே!

Friday, August 15, 2014

சுற்றுச்சூழல் protect our environment (POET)

ஆடி மாதத்தில் பட்டணம்புதூர் நொய்யல் மதகு

விஷமாகிப்போன ஆறு
            பட்டணம் புதூர் மேற்குப்புறத்தில் ‘எல் அண்டு டி’ புறவழிச்சாலை பிரிவின் உள்ளே நொய்யல் ஆறு செல்கிறது. ஆடி மாதத்தில் பெருக்கெடுத்து வெள்ளம் புரழும். அதைப்புகைபடம் எடுக்கலாமென ஒரு நல்ல காலைப்பொழுது மஃப்ளர் கழுத்தில் சுற்றிக்கொண்டு ஸ்கூட்டரில் சென்றேன். வீட்டிலிருந்து பத்து காத தூரம் இருக்கும். ஏமாற்றமே மிஞ்சியது. என்ன செய்ய? வெள்ளம் நுங்கும் நுரையுமாகச்செல்கிறது என எழுதுவதை மாற்றி, வேதிப்பொருட்கள் கலந்த நுரை பொங்கிக்கொண்டிருந்தது. மக்கள் புலங்கிய சாக்கடை நீர் கலந்தும், செல்வபுரம் போன்ற பகுதிகளில் பொறுப்பற்ற சாயப்பட்டறை அதிபர்கள் விடும் சாய நீர் கலந்தும், நீர் மாசுபட்டு நுரைத்துக்கொண்டு மெதுவாக நகர்ந்தது.
நீரில் விஷமேற்றப்பட்டு விட்டது. இதில் தவளை, மீன், நண்டு, தண்ணீர் பாம்பு, புழுப்பூச்சிகள் எப்படி வாழும்? இதில் பிடித்த மீன் சாப்பிடும் மனிதன் கதி என்ன? அங்கிருந்த பிரிந்த ராஜவாய்க்கால் பள்ளபாளையம், கண்ணம்பாளையம், சுலூர், ஆச்சான் குளம் என நிரப்பப் போகும் நொய்யல்நீர் விஷமாகிக் கருப்பாகத் தெரிந்தது. ராஜவாய்கால் எனில் குளத்துக்கு நீர் கொண்டுபோகும் கால்வாய். இது போல ஒவ்வொரு குளத்துக்கும் நீர் எடுத்துப்போகும் கால்வாய்கள் ராஜ வாய்க்கால்களென புரிந்து கொள்ளவேண்டும்.இதையேன் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பார்த்துக்கொண்டு மெத்தனமாக உள்ளது?
நான் அந்த மதகில் ஆச்சர்யப்பட்டு நிற்க, ஒரு பெரியவர் ‘காத்து அடிக்கப்போகுது. நுரை மேலே பட்டுதுனா உடம்பெல்லாம் அரிக்கும். இந்தப்பக்கம் வந்து விடுங்கள்’ என்றார். விலகி ஓட நுரை சர்ஃப் போல திட்டுத்திட்டாகப்பறந்தன. இங்கு காதல் பாட்டு எடுக்கலாமா? கரையோர தாவரங்களின் கதி என்ன? நீர் அருந்தும் பறவைகளின் கதி என்ன? ஏன் மனிதன் பொறுப்புணர்வு இல்லாமல் இப்படி நீரை மாசுபடுத்துகிறான். இவன் எப்போது திருந்துவான்? புகைப் படத்தைப்பாருங்கள். நெஞ்சம் தீயாக கனழ்கிறது இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்து விட்டால்…..

இதை சீர் செய்வது எங்ஙனம்? 1. சாயப்பட்டறைகளை இழுத்து மூடுவது 2. சாயப்பட்டறைகளிலிருந்து வெளியேறும் சாய நீரை சுத்திகரித்து வெளியேற்ற வேண்டும். 3.குளத்துக்கு நீர் விடும் போது இயந்திரம் மூலமாக சுத்திகரித்து விடவேண்டும். 4. மழைக்காடுகளை உருவாக்கி நீர்வளம் பெருக்க, வேதிப்பொருட்கள் சதவீதம் குறைந்து இவ்வளவு தீமை வராது.

Tuesday, August 12, 2014

அறுகி வரும் பச்சோந்தி

பட்டணம் புதூர் பாதையில் மாய்ந்து போன பச்சோந்தி

வாளையார் பகுதியில் நண்பர் ராமச்சந்திர மூர்த்தி எடுத்த படம்.

பச்சோந்தி (Chameleon)
            நண்பர் ராமச்சந்திரமூர்த்தி சார் பச்சோந்தியை இப்போதெல்லாம் பார்க்க முடிவதில்லை. நீங்கள் சமீபத்தில் பார்த்தீர்களா?’ எனக்கேட்டார். நானும் பார்த்து பல வருஷங்களாயிற்று,’ என்றேன். ‘நான் வாளையார் சென்ற போது எடுத்த புகைப்படம் என ஒரு பச்சோந்தி படத்தை மின் அஞ்சலில் அனுப்பி வைத்தார். அது சாதாரணமாகப் பச்சையாக இருக்கும். மெதுவாகத்தான் கால்களில் நடந்து நகரும். வேலி ஓணான் மாதிரிகுடுகுடுஎன ஓடாது. அடர்ந்த வேலிகளில் இதைப்பார்க்கலாம்.
            உடலில் இருக்கும் நிறமிகளைக்கொண்டு, இது எதிரியிடம் இருந்து தப்பிப்பிற்காக, இடத்துக்கு தக்கவாறு நிறம் மாற்றிக்கொள்ளும். இந்த நிறம் மாற்றும் தன்மை இரையைப்பிடிப்பதற்கும் பயனளிக்கிறது. நாக்கு நீட்டுமளவு (அதாவது ஒன்னரையடியாவது இருக்கும்) தூரத்திலிருக்கும் இரை இதனைக் காணமுடியாதவாறு இடத்தின் நிறத்துக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும்.  ஓடி தப்பிக்க முடியாது என்பதற்காகவும் நாக்கை நம்பி வயிறு வளர்க்கும் உயிரினம் ஆதலின், இறைவன் செய்த உதவியிது. வேலி ஓணான் மாதிரி உடல், தலை அமைப்பு. செதில், செதிலாக உடல் மேற்பரப்பு உள்ளது. மற்றபடி கண்கள், தலை வித்தியாச அமைப்பு கொண்டது. வால் வட்டமாக சங்குசக்கரம் மாதிரி உள்ளது. நாக்கு ஒண்ணரை அடிக்கு நீட்டி பூச்சிகளப்பிடிக்கும். நாக்கு நுனி ஒட்டிக்கொள்ளும் தன்மையுள்ளது. இதன் உணவு பூச்சிகள்.
            அடிக்கடி நண்பர்கள் குழுவுக்குள் மாற்றி, மாற்றி ஒரு பக்கம் சாதகமாகப்பேசினால், ‘போடாப்பச்சோந்தி எனத்திட்டுகிறோம். ஒரு நாள் பட்டணம் புதூர் அருகில் மதகு ஒன்று உளது. ஆடியில்  நொய்யல் ஆற்றுநீர் வழிந்து போகும். அது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதை புகைப்படம்எடுக்கலாம் எனஅதிகாலை ஸ்கூட்டரில்  போனால் ஏமாற்றம் மிஞ்சியது. மதகு வழியவில்லை. அங்கிருந்து பட்டணம் புதூர் வழியாக பள்ளபாளையம் குளத்துக்குப் போய் பின்பு ராமகிருஷ்ண மடத்தின் அனாதை விடுதிக்குப் போகலாம் என நினைத்து பட்டணம் புதூர் நுழைந்தேன். பாதையில் பச்சோந்தி அரைபட்டுக்கிடந்தது.இரவில் வாகனம் எதோ அதன் மேல் ஏற்றி விட்டது. அந்தோ! பச்சோந்தி மெதுவாக நகரும், நகர்ந்து பாதையின் அடுத்த பக்கம் போவதற்குள் விபத்தில் மாட்டி இறந்து கிடந்தது. நேரில் பார்த்து சந்தோஷம் கொள்ளாது துரதிஷ்டமாக இறந்து போனதைக்கண்டேன். பச்சோந்தி அறுகி வரும் ஊர்வன இனம்.
            கால்கள் வலுவற்றது அதனால் வால் புதர்ச்செடிகளில் நகர பிடிமானத்துக்கு பிடித்துக்கொள்கிறது. கண்கள் சுற்றிலும் பார்க்க ஏதுவாக துறுத்திக்கொண்டிருக்கும் அமைப்பு.
      மனிதனில் பச்சோந்தி வேண்டாம், ஆனால் நிறம் மாறும் இந்த பாவப்பட்ட பச்சோந்தி தேவை.